தன் மீது சிறுநீர் கழித்தவரை விடுவிக்க பழங்குடியின இளைஞர் கோரிக்கை..!
பழங்குடியின இளைஞர் தன் மீது சிறுநீர் கழித்த சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக தலைவர் பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தையடுத்து, எதிர்கட்சினர் பழங்குடியினரை அவமதித்தது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து, அவரது வீட்டையும் இடித்தனர். இதன்பின், பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங், அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருடைய கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, பழங்குடித் தொழிலாளி தஷ்மத் ராவத்க்கு முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் அறிவுறுத்தலின் பேரில், ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு வீடு கட்டுவதற்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழங்குடியின இளைஞர் தன் மீது சிறுநீர் கழித்த சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.