ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை; பாட்னா நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு.!
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணை, மே 15 வரை பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மோடி பெயர் குறித்த அவதூறாக பேசியதாகக் கூறப்படும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணை, பாட்னா நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், மே 15 வரை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுஷில் குமார் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியின் மனுவை விசாரித்த நீதிபதி சந்தீப் குமார், ஏற்கனவே குஜராத் நீதிமன்றத்தால் இதேபோன்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால், அதே குற்றத்திற்காக அவரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று கூறினார்.
இந்த மனு தொடர்பாக ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராகுலுக்கு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது, இதனை எதிர்த்து ராகுல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரே குற்றத்திற்கு இருமுறை ஒருவரை விசாரித்து தண்டிக்க முடியாது என வழக்கு விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் மே 15 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் ராகுல் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.
2019 தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் பெயர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில், சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது, மேலும் ராகுல் எம்.பி பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.