நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை தேவை! – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!
ஏன் ஒருவர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என நாட்டின் குடிமக்களுக்கு தெரிய வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து.
நீதிபதிகள் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை தேவை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் கூட்டத்தில் விவாதிகப்படுபவை குறித்து ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். ஏன் ஒருவர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என நாட்டின் குடிமக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
OSSA (ஒடிசா சூச்சனா அதிகார அபிஜன்) ஏற்பாடு செய்த இரண்டு நாள் மாநில அளவிலான கூட்டத்தில், ஆட்சியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு என்ற தலைப்பில் பேசிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் இவ்வாறு தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறை, அவர்களின் இடமாற்றம் உள்ளிட்டவை தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகளின் கருத்தை மக்கள் தெரிந்துகொள்ள நீதிமன்ற அறை விசாரணைகள் இணைய ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.