அதிர்ச்சி!!எஞ்சின் இல்லாமல் ஓடிய ரயில்பெட்டிகள் மயிர் நுனியில் உயிர் தப்பிய பயணிகள்!!
ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் பயணிகளுடன் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஒடிசாவின் பூரி நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திட்லாகர் ((Titlagar)) ரயில் நிலையத்தில் மேலும் சில பெட்டிகளை இணைப்பதற்காக ரயில் எஞ்சின் கழற்றப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் பின்னோக்கிச் சென்றது. இவ்வாறு எஞ்சின் இல்லாமல் பெட்டிகள் மட்டும் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றன.
எஞ்சின் இல்லாமல் வேகமாக ரயில் பின்னோக்கி சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்களும், ரயிலில் இருந்த பயணிகளும் அலறினர்.
பின்னர் வேகம் குறைந்த பெட்டிகள் தாமாக நின்றன. இதில் பயணிகள் யாருக்கும் காயம்படவில்லை என்றாலும் இதுகுறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சம்பல்பூர் ரயில்வே மண்டல மேலாளர் ஜெய்தீப் குப்தா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பின் திட்லாகர் ரயில் நிலையத்தில் இருந்து மாற்று எஞ்சின் கொண்டு செல்லப்பட்டு ரயிலுடன் பொருத்தப்பட்டது.