இந்தியாவில் அதிகரிக்கும் ரயில் விபத்துகள்! இந்த வருடம் மட்டும் எத்தனை தெரியுமா?
இந்த வருடம் மட்டும் ஹைதிராபாத், டெல்லி, தெலுங்கானா , ஜார்கண்ட், உத்திர பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் சில விபத்துகளில் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
டெல்லி : கடந்த வருடம் ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. இந்த ரயில்கள் மீது எதிர் திசையில் வந்தஹவுரா அதிவிரைவு ரயில் மோதிய கோர விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கர விபத்தை அடுத்து, இந்திய ரயில்வே துறை பல்வேறு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது, மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்கப்படும் என ரயில்வே துறையால் கூறப்பட்டது. ஆனாலும், ரயில் விபத்துகளை ரயில்வே துறையால் முழுதாக தடுக்க முடியவில்லை.
நேற்று இரவுகூட சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டை இடையே உள்ள ரயில்வே பாதையில் சரக்கு ரயில் மீது மைசூரு வாராந்திர பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், 19 பேர் காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்தால் 18 ரயில்கள் ரத்தாகியுள்ளன. பல ரயில்கள் வழித்தடம் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்கண்ட விபத்துகளை தவிர்த்து இந்த வருடம் மட்டுமே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் சில விபத்துகளில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான விபத்துக்கள் பற்றி கிழே காணலாம்…
ஹைதிராபாத் ரயில் விபத்து :
கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி, சென்னையில் இருந்து சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
டெல்லி சரக்கு ரயில் விபத்து :
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி காலையில், டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் ஒன்றின் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை .
தெலுங்கானா ரயில் தீவிபத்து :
கடந்த மார்ச் 5ஆம் தேதி தெலுங்கானாவில் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
மேற்கு வங்கம் ரயில் விபத்து :
கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று, மேற்கு வங்க மாநிலம் நியூஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ரங்கபாணி அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது, பின்னால் வந்த சரக்கு ரயில் வேகமாக மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர். 4 ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன.
உத்திர பிரதேசம் ரயில் விபத்து :
கடந்த ஜூலை 18இல் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் சண்டீகர் – திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்தனர். 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ஜார்கண்ட் ரயில் விபத்து :
கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில், ஜார்கண்டில் உள்ள சக்ரதர்பூர் அருகே மும்பை-ஹவுரா ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அவ்வபோது ரயில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு சமயங்களில் சிக்னல் கோளாறு என தொழில்நுட்பத்தையே ரயில்வே துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரயில்வே தொழில்நுட்பத்தை மேம்படுத்தி விபத்துகளை குறைத்து , பயமில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசிடம் பலரும் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.