ரயில் விபத்து; உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்படும் – ஒடிசா அரசு

death toll hike

இறப்பு எண்ணிக்கை குறித்து இன்று ஒரு முடிவுக்கு வருவோம் என்று ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தகவல்.

ஒடிசாவில் பலசொற் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த மூன்று ரயில்கள் விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஒன்று விபத்தில் சிக்கியது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாவும், 747 பேர் காயமடைந்ததாகவும், 56 பேருக்கு மிகவும் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவலை வெளியிட்டிருந்தார். அவர் கூறுகையில், நேற்று சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டது கண்டறியப்பட்டது, இதனால் இறப்பு எண்ணிக்கை 275 என திருத்தப்பட்டுள்ளது. இதில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பின்னர், இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் இன்னும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல் தெரிவித்திருந்தார். எனவே, மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திரித்துக் கூறப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், புவனேஸ்வர், பூரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்களில் இருந்து இயல்பு நிலை திரும்பும் வரை, சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவைகள் கிடைக்கும் என்றும் உடல்களை அடையாளம் காணப்பட்டு, அவற்றை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்