சூடானில் உயிரிழந்த இந்தியரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்..! – மத்திய அரசு
சூடானில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இந்தியர் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சூடானில் ராணுவ மோதல் :
சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் ராணுவ மோதல் நிலவி வருகிறது.
இந்தியர் உயிரிழப்பு:
நேற்று, சூடான் தலைநகர் கார்ட்டூமில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள பயங்கர மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்தனர். அதில், இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
அனைத்து உதவிகளும் செய்யப்படும் :
தற்பொழுது, சூடான் தலைநகர் கார்ட்டூமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இந்தியர் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், அவரது உடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை :
மேலும், சூடானில் அவருடன் இருந்த ஆல்பர்ட் அகஸ்டினின் மனைவியும் மகளும் பத்திரமாக இருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.