இன்ஸ்டாவில் நடந்த சோகம்; வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு ரூ.8.6 லட்சம் இழப்பு.!
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வேலைக்கு விண்ணப்பித்தபோது ரூ.8.6 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பல்வேறு நிறுவனங்களும் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பலரும் புதிய வேலைகளில் செல்வதற்கு தயாராக, பல்வேறு வேலைவாய்ப்பு தளங்களில் விண்ணப்பித்தும் வருகின்றனர்.
மோசடி வேலைகள்: தற்போதுள்ள இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி பல மோசடி நிறுவனங்களும் ஏமாற்றி வருகின்றனர். டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், இதே போல வேலைக்காக தேடிக்கொண்டிருக்கும் போது, சமூக வலைதளமான இன்ஸ்டாவில் ஒரு வேலைக்கான விளம்பரத்தை பார்த்துள்ளார்.
ரூ.8.6 லட்சம் மோசடி: பின்பு அந்த வேலைக்கான லிங்க்-ஐ கிளிக் செய்தபோது தேவையான விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அவரும் விவரங்களை கொடுத்துவிட்டு, ரூ.750 ஐ பதிவுக் கட்டணமாக டெபாசிட் செய்துள்ளார். அதன்பிறகு, கேட் பாஸ் கட்டணம், இன்சூரன்ஸ், செக்யூரிட்டி பணம்’ என, 8.6 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை, ராகுல் என்ற மோசடி நபரின் கணக்கிற்கு அந்த பெண் அனுப்பியுள்ளார்.
சந்தேகம்: ராகுல் தொடர்ந்து அதிக பணம் கேட்டதை அடுத்து, சந்தேகமடைந்த அந்த பெண் மற்றும் அவரின் கணவர் போலீசில் புகார் அளித்தனர். தற்போது குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்ததில், கோவிட் -19 தொற்று காலங்களின் போது வேலை இழந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று மக்களை ஏமாற்றத் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையில் ஒப்புக்கொண்டார்.
எப்படி பாதுகாப்பாக இருப்பது: இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள், LinkedIn, Naukri.com, Indeed போன்ற உண்மையான போர்ட்டல்களில் இருந்து வேலைகளுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது.ஒருவேளை நீங்கள் சமூக ஊடகங்கள் வழியாக வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், கணக்கை முழுமையாகச் சரிபார்த்துவிட்டு, இது எவ்வளவு முறையானது என்பதை பொறுத்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் புகழ்பெற்ற நிறுவனங்கள் வேலையில் சேருவதற்கு எந்தவித கட்டணமும் கேட்பதில்லை. பெயர், ஃபோன் எண் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்களை நிரப்புவதற்கு முன் மிகவும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, நம்பகமான இணையதளமா என்பதாகி உறுதி செய்துவிட்டு உள்ளிடவும்.