கள்ளு குடித்ததால் விபரீதம்..! 3 பேர் பலி, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
மத்தியப் பிரதேசத்தில் பனைமரக் கள்ளு குடித்ததால் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாதம்லி கிராமத்தில் கள்ளு குடித்த மூன்று பேர் உயிரிழந்தார் மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜாதம்லி கிராமத்தில் உள்ள ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது வயலில் உள்ள மரத்திலிருந்து எடுக்கப்பட்ட கள்ளை உட்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து நஸ்ரு என்பவர் உயிரிழந்தார். அந்த நபர் உயிரிழந்ததை அடுத்து தகவல் அறிந்த காவல்துறையை சேர்ந்த குழு ஒன்று கிராமத்திற்கு வந்து, கள் சாப்பிட்ட மற்றவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 45 வயதான பெண் மற்றும் 55 வயது உடைய ஒரு ஆணும் சிகிச்சையின் போது உயிரிழந்தனர்.
மேலும், கள்ளை அருந்திய 13 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் காவல்துறையினர் அவர்களது கிராமப் பகுதியில் சோதனை நடத்திய போது அப்பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது கள்ளுடன் கலந்ததா.? என்பது கண்டறியப்படவில்லை என்றும் இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.