தவறான நோக்கமின்றி பெண்களைத் தொடுவது அடக்கத்தை சீர்குலைப்பதாக இல்லை..! மும்பை உயர் நீதிமன்றம்
தவறான நோக்கமின்றி பெண்களைத் தொடுவது அடக்கத்தை மீறுவதாக இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 18 வயதான இளைஞர் ஒருவர் 12 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம் சட்டப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி அந்த இளைஞர், தனது முதுகு மற்றும் தலையில் கையை வைத்து, சீக்கிரமாக வளர்ந்துவிட்டதாக கூறியதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞர், விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
தற்பொழுது இந்த வழக்கிற்கான தீர்ப்பு பிப்ரவரி 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 13-ஆம் தேதி வெளியிடப்படுள்ளது. அதில் நீதிபதி பாரதி டாங்ரே, இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, குற்றவாளிக்கு எந்தவித பாலியல் நோக்கமும் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியை அவர் குழந்தையாகப் பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியோ, அவர் தன்னிடம் தவறான எண்ணத்தில் பேசவில்லை, ஆனால் அவர் சிறுமியின் மீது கை வைத்தது சங்கடத்தை ஏற்படுத்தியது என்று நீதிபதி உத்தரவில் கூறினார். பின்னர் எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் சிறுமியின் முதுகு மற்றும் தலையில் கையை வைப்பது, அடக்கத்தை சீர்குலைப்பதாக இருக்காது என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அவரது தண்டனையை ரத்து செய்தது.