“கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல;குற்றவாளிக்கு ஜாமீன்” – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
பாலியல் நோக்கம் இல்லாமல் பெண் குழந்தையின் கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பை,தானே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் முகமது அகமது உல்லா(வயது 46) என்பவர்,கடந்த ஆண்டு எட்டுவயது சிறுமியை தனது இறைச்சி கடைக்குள் அழைத்து சென்றுள்ளார்.அவர் சிறுமியை தனது கடைக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒரு பெண், சந்தேகம் அடைந்து, பின்னர் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்,அப்போது,அங்கு முகமது உல்லா,சிறுமியின் கன்னத்தைத் தொட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து,மும்பைக்கு அருகில் தானே மாவட்டத்தில் உள்ள ரபோடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் செய்தார்.
இதனையடுத்து,அவர்மீது FIR பதிவு செய்யப்பட்டு ஜூலை 2020 இல் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (பிபிசிஎஸ்ஓஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,உல்லா ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.அவர் தனது ஜாமீன் மனுவில், வியாபாரத்தில் தனது போட்டியாளர்களால் அவர் இந்த வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறினார்.தான் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை என்றும், இறைச்சி கடை நடத்தி வருவதாகவும், நீண்ட காலமாக அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில்,ஆகஸ்ட் 27 அன்று இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்தீப் ஷிண்டேயின் ஒற்றை அமர்வு, தானே பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி முகமது அகமது உல்லாவுக்கு ஜாமீன் வழங்கியது.
மேலும்,ஜாமீன் வழங்கியது குறித்து நீதிபதி கூறுகையில்:”என் பார்வையில், பாலியல் நோக்கம் இல்லாமல் கன்னங்களைத் தொடுவது ‘பாலியல் வன்கொடுமை’ குற்றத்தை ஈர்க்காது,இது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும்,குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்துடன் பாதிக்கப்பட்டவரின் கன்னங்களைத் தொட்டதாகக் கூறப்படவில்லை”,என்று கூறி ஜாமீன் வழங்கினார்.
எனினும்,ஜாமீன் வழங்கப்பட்டது என்பது விசாரணைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தினார்.