டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா…தேசிய கொடியை ஏற்றவுள்ள ஜனாதிபதி!
டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை பார்வையிடுகிறார். நாட்டின் 75வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாட்டின் 75வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதாவது, ராஜபாதை எனப்படும் கடமைப்பாதையில் (கர்த்தவ்யா பாத்) ஜனாதிபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இவ்விழாவில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Republic Day 2024 : நீதித்துறையின் அடையாளம் ராமர் கோயில்… குடியரசு தலைவர் உரை.!
இதைத்தொடர்ந்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொள்கிறார். பின்னர் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலங்களின் அரசு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்.
அதைத் தொடர்ந்து காலை சுமார் 10.30 மணி அளவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும். குடியரசுத் தலைவர் மாளிகை முதல் நேதாஜி சிலை வரை அமைந்துள்ள கடமை பாதையில்தான் குடியரசு தினத்தின் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. எனவே, குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் உட்பட சுமார் 70,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.