Today’s Live: வயநாடு மக்களின் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவினரால் தடுக்க முடியாது..! ராகுல் காந்தி..!
ராகுல் காந்தி உரை :
கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெறுகிற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, “எனது எம்.பி பதவியை பறிக்கலாம், எனது வீட்டை எடுத்துக்கொள்ளலாம், என்னை சிறையில் தள்ளலாம், ஆனால் வயநாடு மக்களின் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவினரால் தடுத்து நிறுத்த முடியாது எனக் கூறினார். மேலும், என் வீட்டிற்கு காவலர்களை அனுப்பினால் நான் அஞ்சுவேன் என நினைத்தார்கள், எனக்கு கவலை இல்லை, அந்த வீட்டில் குடியிருப்பதை நானும் விரும்பவில்லை என்று கூறினார்.
11.04.2023 5:40 PM
குளிர்பானம் தவிர்க்க அறிவுரை :
கோடைகால வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, மதுபானம், டீ, காபி, கார்பன், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்குமாறும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிக புரதச்சத்துள்ள உணவுகள், பழைய உணவு பொருட்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
11.04.2023 5:15 PM
அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியம் :
தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அவர், மாநில அளவிலான போட்டிகள் விரைவில் சென்னையில் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே மனி ஸ்டேடியம் உள்ள 61 தொகுதிகள் தவிர மற்ற 173 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்’ எனவும் கூறினார்.
11.04.2023 4:15 PM
பாமக வலியுறுத்தல் :
சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரைக்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை என்றும் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர் என பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கூறினார். மேலும், தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தடைசெய்ய வேண்டும் என பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
11.04.2023 2:10 PM
கோமியம் உடல்நலத்துக்கு நல்லதல்ல :
பசுவின் கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடலநலத்துக்கு உகந்தது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பசு மற்றும் எருமைகளின் கோமியத்தில் மனிதர்களின் உடல்நலனுக்கு கடுமையான கேடுகளை விளைவிக்கும் 14 வகை பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் பல வகையான மாடுகளின் கோமிய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
11.04.2023 1:00 PM
வெப்ப அலை :
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லவும் என்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
11.04.2023 12:20 PM
உச்சநீதிமன்றம் ஒப்புதல்:
ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் தொடர உத்தரவிட்டுள்ளது, அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட பணியாளர்களை, 7,500 ஊதியத்தில் வேலையில் அமர்த்தும் திட்டத்துக்கு ஒப்புதல் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
11.04.2023 11:35 AM
இந்தியா கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,676 பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
11.04.2023 11:20 AM
ஆர்எஸ்எஸ் அனுமதி :
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
11.04.2023 10:43 AM
விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த ஆணையம் :
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட குறிப்பில், ‘நிறுவனங்களை கண்காணிக்க உருவாக்கப்படும் ஆணையத் தலைவராக தலைமைச்செயலாளர் பதவிக்கு குறையாத பதவி வகித்தவர் இருப்பார். உறுப்பினர்களாக retd IG, Online விளையாட்டுகள் & IT நிபுணத்துவம் பெற்றோர் இருப்பர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.04.2023 10:40 AM
கலாஷேத்ரா: மனித உரிமை ஆணையம் விசாரணை:
கலாஷேத்ரா கல்லூரியில், மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு இன்று விசாரணை நடத்தவுள்ளது. பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மீது மாணவிகள் கூறிய பாலியல் புகாரில், ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
11.04.2023 09:00 AM
வயநாடு வரும் ராகுல் காந்தி:
வயநாடு மக்களவை தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக, இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி. அங்கு காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் பேரணியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11.04.2023 08:00 AM