வரலாற்றில் இன்று..! புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்..!
இன்று புரட்சி கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பாரதிதாசன் என்பவர் யார்.?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891ம் ஆண்டு இதே நாளில் (29 ஏப்ரல்) புதுச்சேரியில், கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கனகசுப்புரத்தினம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அவர் வளர்ந்து தமிழாசிரியராகப் பணியாற்றிய போது, சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன் வாழ்க்கை:
தமிழ் மொழியில் பற்றுக்கொண்ட இவர், பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். பிறகு தமிழ்மீது கொண்ட பற்றினாலும், அவரது முயற்சியாலும் கல்லூரி இரண்டாம் ஆண்டில் கல்லூரியிலேயே முதலாவது மாணவராக தேர்வானார். பிறகு, 1919ம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரியில் தமிழாசிரியாராகப் பணியாற்றிய பாரதிதாசன், 1920ம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
அரசியல் வாழ்க்கை:
இதன்பிறகு பிரபல எழுத்தாளரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், தன்னை அரசியலிலும் ஈடுபடுத்திக் கொண்டு, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1946ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி அறிஞர் அண்ணாவால், பாரதிதாசன் “புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். நகைச்சுவை உணர்வு நிரம்பிய பாரதிதாசனின் படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
பாரதிதாசன் படைப்புகள் :
இவர் பல படைப்புகளை தமிழ்மொழியில் எழுதியிருந்தாலும் சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அதில், பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, இசையமுது போன்றவை அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சிலவையாகும். இவர் குயில் என்னும் ஒரு திங்களிதழையும் நடத்தி வந்தார். 1990ம் ஆண்டு இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் பொது உடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம் :
இத்தகைய அறிய படைப்புகளுக்கு சொந்தக்காரரான புரட்சி கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் 1964ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி காலமானார்.