தெலுங்கானா முதல்வராகும் ரேவந்த் ரெட்டி.! விழா ஏற்பாடுகள் தீவிரம்.!
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். கமாரெட்டி மற்றும் கோடங்கல் பகுதியில் போட்டியிட்ட ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 மாநில தேர்தல் வெற்றி.! இன்னும் முதலமைச்சர்களை முடிவு செய்யாத பாஜக.!
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்று மாலை ஹைதிராபாத், எல்பி ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்க உள்ளார்.
அவரோடு, உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு, பொன்னம் பிரபாகர், கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தனா அனசூயா, தும்மல நாகேஸ்வர ராவ், கொண்டா சுரேகா, ஜூபல்லி கிருஷ்ணாராவ் ஆகிய 12 அமைச்சர்கள் ரேவந்த் ரெட்டியுடன் பதவியேற்க உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவி ஏற்க உள்ளார் .
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி , செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திர சேகர ராவ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்டை மாநிலமான ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.