திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!
கர்நாடகா அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 34 ஆயிரம் கோயில்களிலும் நந்தினி நெய் மட்டுமே பயன்டுத்த வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில், விலங்கின் கொழுப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில அரசும், இதற்கு சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என சில அரசியல் தரப்பினரும், ‘ஆளும் கட்சி தங்கள் செய்த தவறை மறைக்க போலியாக குற்றம் சாட்டுகிறது.’ என முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சரும் குற்றம் சட்டி வருகின்றனர்.
இப்படியான சூழலில், கர்நாடகா அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கர்நாடகா மாநிலத்தில் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 34 ஆயிரம் கோயில்களிலும் பிரசாதம் தயாரிக்க மற்ற பிற கோயில் உபயோகத்திற்கு மாநில அரசாங்க பால் கூட்டமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் நந்தினி நெய் (தமிழக ஆவின் போல) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா கோயில்களில் விளக்கு ஏற்றுதல், பிரசாதம் தயாரித்தல் உள்ளிட்ட கோவில் மத சடங்குகளுக்கு அரசாங்கத்தின் நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், பிரசாதம் ஆகியவற்றின் தரம் ஒருபோதும் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை கோயில் ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் , பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் விநியோகம் செய்கிறது என்ற வதந்தி நேற்று பரவியது. இதனை தமிழக அறநிலையத்துறை மறுத்து, ‘பழனி கோயிலில் பிரசாதம் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.’ என விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.