திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனம்: தடுப்பூசி கட்டாயம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், செப்டம்பர் 20 முதல் இலவச தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, 8,000 இலவச டோக்கன் வழங்கப்படுகிறது.
தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதாவது, கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். மேலும், தரிசனத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.