திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெரிசலுக்குக் காரணம் மக்கள் அதிகமாக கூடியது தான் என தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு கூறியுள்ளார்.
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் நேற்று இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
மக்கள் அளவுக்கு அதிகமாக அந்த பகுதியில் இரவிலே திரண்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மூச்சுத்திணறியதால் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சிலர் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து, தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியானது வருத்தமளிக்கிறது எனவும், அதிகம் கூட்டம் கூடியதே இதற்கு காரணம் என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” ஆந்திர முதல்வர் இன்று காலை திருப்பதிக்கு வருகை தருகிறார்… நாங்கள் வருத்தப்படுகிறோம். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெலிகான்பரன்ஸ் மூலம் அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என ஆந்திர முதல்வர் கண்டித்தும் இருக்கிறார்.
இந்த துக்கமான நேரத்தில் நாம் யாரையும் குறை கூற முடியாது, கவலைப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். ஒரு மையத்தில் பக்தர் மயங்கிய நிலையில் இருந்தபோது, டிஎஸ்பி கேட்டை திறந்ததால் டிக்கெட் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் பக்தர்கள் ஒன்றாக உள்ளே நுழைய முயற்சி செய்தார்கள். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு இந்த சம்பவத்தில் சிலர் உயிரிழந்தனர்.
டெலிகான்பரன்ஸ் மூலம் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் முந்தைய தினமே நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்திருந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் இதை சரியாக கையாளாததால் இந்த மோசமான சம்பவம் நடந்ததாகவும் கோபத்தை வெளிப்படுத்தியதோடு மன்னிப்பும் கேட்டார்.