திருப்பதி தனி மாநிலமா.? கடுப்பான உச்சநீதிமன்றம்.!
திருப்பதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் ஓர் புயலை கிளப்பினார். இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியும், திருப்பதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி K.A.ராகுல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த பொதுநல மனுவை பி.ஆர்.கவாய், K.V.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரிக்க தொடங்கியது. அப்போது, “ஏற்கனவே, இந்த லட்டு விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றும்,
“உங்கள் கோரிக்கையின்படி , புகழ்பெற்ற அனைத்து கோவில்கள், குருத்வாராக்கள் போன்றவை அனைத்திற்க்கும் தனி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்பதை எங்களால் கூற முடியாது. திருப்பதி மக்கள் தொகை மொத்தமே 30 லட்சம் இருக்கையில், அவர்களுக்காக தனி மாநிலம் அமைப்பது எப்படி சாத்தியமாகும்.” எனக் கண்டிப்புடன் கூறி அந்த பொதுநல வழக்கை உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.