Tirupati : திருப்பதி பிரம்மோற்சவ விழா.! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலையுடன் மலையப்பசுவாமி கருட சேவை உலா.!
நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரிய விழாவான திருப்பதி பிரமோற்சவ விழா ஏழுமலையான் கோவிலில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த 18ஆம் தேதி திங்களன்று திருப்பதி மலையப்பசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. திருப்பதி மலையப்பசுவாமிக்கு பிரம்மன் முன்னெடுக்கும் விழாவாக இந்த பிரமோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது.
தினமும் திருப்பதி மலையப்ப சுவாமி பக்தர்கள் முன் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார். தினமும், வீதி உலா, கலை நிகழ்ச்சிகள் என திருப்பதி திருவிழா கோலம் பூண்டுள்ளது. நேற்று நான்காவது நாளில் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் சர்வ பூபால வாகன புறப்பாடு நடைபெற்றது. கோவில் மாட வீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர்கள் தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து இன்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன சேவை நடைபெற உள்ளது. காலையில் மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5 ஆம் நாள் உற்சவமாக நடைபெறும் கருட சேவையை காண நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு குவிந்துள்ளனர். தற்போது வரை லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர் என்றும், இன்று மாலை கருட சேவையை காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என கூறப்படுகிறது. அதே போல, மலையப்பசுவாமிக்கு கருட சேவை உலாவில் அணிவிக்க தமிழகம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடி களைந்த மாலை அணிவிக்கப்படும். அந்த பிரமாண்ட மாலை திருப்பதிக்கு வந்துள்ளது.
மேலும், திருப்பதி ஏழுமலையனுக்கு வெண்பட்டு குடைகளை தமிழ் இந்து தர்மார்த்த சமிதி அமைப்பினர் நன்கொடையாக வழங்கினர். கடந்த 16ஆம் தேதி சென்னையில் இருந்து நடைபயணமாக புறப்பட்ட சமிதி அமைப்பினர் நேற்று திருச்சானூர் பத்மாவதி தயார் கோவிலுக்கு 2 வெண்பட்டு குடைகள் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு, திருப்பதி தேவஸ்தானத்தில் வெண்பட்டு குடைகளை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஒப்படைத்தார்.