மிரட்டப்படும் இந்திய விமானங்கள்.. வெடிகுண்டு மிரட்டல் வந்தால் என்ன நடக்கும்?
இந்தியாவின் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருக்கிறது.
டெல்லி : கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் பயணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இந்த மிரட்டல்கள் குறித்து விசாரணையில் இவை அனைத்துமே புரளி என கண்டறியப்பட்டாலும், அட்டவணை மாற்றம், திருப்பிவிடப்படுவது, விமான ரத்து என என தொடர்ந்து விமான சேவை சிரமத்துக்குள்ளாகி வருகிறது.
இவ்வாறு இந்திய விமானங்கள் தொடர்ந்து மிரட்டலுக்கு உள்ளாகி வரும் நிலையில், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொது விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரகம் (பிசிஏ எஸ்) விமான நிறுவன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் வந்தால் என்ன நடக்கும்
நடுவானில் சென்று கொண்டிருக்கும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தால், விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழுவின் (BTAC) அவசர கூட்டம் உடனடியாகக் கூட்டப்படுகிறது. அந்த அச்சுறுத்தலின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு, அதற்கான நடவடிக்கையை வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழுவால் (BTAC ) எடுக்கப்படுகிறது.
ஒருவேளை அச்சுறுத்தல் உண்மை என கருதப்பட்டால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை (ATC) தொடர்பு கொண்ட பிறகு, விமானிகள் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வர். அதன்படி, விமானத்தின் இருப்பிடத்தை பொறுத்து, விமானிகள் புறப்படும் விமான நிலையத்திற்குத் திரும்பவும், அறிவுரை வழங்கப்பட்ட இடத்திற்குச் செல்லவும் அல்லது அருகிலுள்ள விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பிவிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதுவே, புறப்படாமல் இருக்கும் விமானத்திற்கு அச்சுறுத்தல் வந்தால், BTAC-ஐக் கலந்தாலோசித்த பிறகு, முழுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதுவே, இந்திய வான்பரப்பிற்கு வெளியே இருக்கும் சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தால், இந்திய ஏஜென்சிகள் சர்வதேச ஏடிசி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பின், அடுத்த நடவடிக்கை முடிவு செய்யப்படுகிறது.