பஞ்சாப் முதல்வர் வீட்டு முன்னர் போராட்டம்.! தடியடி நடத்திய போலீசார்.!
தேர்தலில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என பஞ்சாப் முதல்வர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து பிரச்சரம் செய்வதற்காக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுவருகிறார். இந்த வேளையில், இன்று காலை, பாட்டியாலா புறவழிச்சாலையில் போராட்டக்காரர்கள் திரண்டு, பேரணியாக பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருக்கும் முதலமைச்சரின் வீட்டை நோக்கி செல்லஆரம்பித்தனர்.
போராட்டக்காரர்கள், ஆம் ஆத்மி தேர்தலின் போது அறிவித்த, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அரசு குறைந்தபட்ச தினக்கூலியை 700 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், கிராம கூட்டுறவு சங்கங்களில் தலித்துகளுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வேண்டும் எனவும்,
தோல் நோயால் கால்நடைகள் இறந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் கூறி முழக்கமிட்டனர்..
அப்போது முதல்வர் குடியிருப்பு வளாகம் அருகே சென்றபோது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப் முதல்வர் வீட்டு முன்பு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தேர்தல் சமயத்தில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பின்னால் பாஜக இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.