குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் இது தான் – முப்படைகளின் விசாரணைக்குழு அறிக்கை…!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த அறிக்கையை முப்படைகளின் விசாரணைக்குழு சமர்ப்பித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த விமானி வருண் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்த விமான விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து முப்படைகளின் விசாரணை குழு முதல்கட்டமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில் ஹெலிகாப்டர் விபத்திற்கு கவனக்குறைவோ அல்லது இயந்திரத்தின் கோளாறோ காரணம் அல்ல எனவும், ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் மேக மூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் தான் இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.