திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு..! பினராயி விஜயன், மோடிக்கு கடிதம்.!
நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் , திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும். மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும், இதனால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல விமான நிலையங்கள் தனியாரிடம் வழங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் புதிதாக 100 விமான நிலையங்கள் நாட்டில் கட்டப்படும் என மத்திய அரசுகூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.