திரிபுராவில் நடந்தது என்ன ?- சூழ்ச்சியா???
திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளுடன், திரிபுரா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் பாஜக கூட்டணி மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சியினரும் மாறி, மாறி முன்னிலை பெற்றனர்.
இதனிடையே மாலை முதல் திடீரென பாஜக கூட்டணி அபார முன்னிலை பெறத்தொடங்கியது. இரவு 8.30 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 31 தொகுதிகளைவிட அதிகமாக, பாஜக கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. எனவே, பாஜக கூட்டணி திரிபுராவில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது.
அதேநேரம் மார்க்சிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில்தான் வெற்றிபெற முடிந்தது. காங்கிரசுக்கு கிடைத்ததோ பூஜ்யம்தான். அக்கட்சி மேகாலயா தவிர நாகாலாந்திலும் பூஜ்யம்தான் பெற்றது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்வராக இருந்து வந்தார். ஆனால், இடதுசாரி ஆதிக்கம் அம்மாநிலத்தில் முடிவுக்கு வந்துள்ளது. மாணிக் சர்க்கார் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து, திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு அமோகமாக வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.