இவர்களுக்கு ராணுவத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர்
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை.
முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். மத்திய அரசு, இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது. அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கு வயது வரம்பு 17 – 21 வயது வரை இருக்கும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 ஆண்டுகள் கழித்து இந்த வீரர்களில் 25% பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர்.
இதில் நிரந்தர பணிக்கு தேர்வாகாத மீதம் உள்ள 75% வீரர்கள் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும், ராணுவத்தில் அக்னிபத் என்ற திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள் 4 ஆண்டு பணிக்கு பின் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் சேர்க்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள், அசாம் ரைபிள்ஸ் படை பிரிவில் சேர்க்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.