இவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை
கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.
கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் (முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ) செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஒருசில வருடங்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முதலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி, கடந்த 10-ம் தேதி முதல் முதல்கட்டமாக சுகாதாரப பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.