இன்னும் இரண்டு மணி நேர ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளது – டெல்லி ஸ்டீபன் மருத்துவமனை!
டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் மருத்துவமனையில் இன்னும் இரண்டு மணி நேர ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நாளுக்கு நாள் புதிதாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதால் பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் வசதி மற்றும் படுக்கை வசதி இன்றி தவித்து வருகிறது.
உலகில் பல இடங்களில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் மருத்துவமனையிலும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே அங்கு ஆக்சிஜன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வருவதும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.