மோடி உலகில் ‘இதனை’ அவர் செய்யலாம்.. ஆனால் நிஜ உலகில்.? ராகுல் கடும் விமர்சனம்.!
டெல்லி: மோடியின் உலகில் வேண்டுமானால் உண்மையை அகற்ற முடியும். ஆனால், நிஜ உலகில் அதனை செய்ய முடியாது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி, பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல. சகிப்பு தன்மை கொண்ட இந்துக்கள் பாஜகவினர் அல்ல என்று பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ராகுல் காந்தி பேசிய கருத்துக்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மேலும், ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது.
ராகுல் காந்தி உரையில் சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது உரையில் சில பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மோடியின் உலகில் (நாடாளுமன்றத்தில்) வேண்டுமானால் உண்மையை அகற்ற முடியும். ஆனால், நிஜ உலகில் உண்மையை மறைக்க முடியாது. நான் என்ன சொல்ல வேண்டுமோ அதனை, நான் சொல்லிவிட்டேன். நான் அவையில் உண்மையை சொன்னேன். அவர்கள் அவை குறிப்பில் இருந்து எதை வேண்டுமானாலும் அகற்றலாம். ஆனால், உண்மை எப்போதும் உண்மையாக மட்டுமே இருக்கும் என ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார்.