மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து நேர்ந்த துயரம்.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.!
மகாராஷ்டிரா : பத்லாபூரில் எல்.கே.ஜி சிறுமிகள் மற்றும் அகோலா மாவட்டத்தில் 6 பள்ளி மாணவிகள் என அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது எல்கேஜி சிறுமிக்கு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை பெற்றோர்கள் சோதித்து பார்த்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதேபோல இன்னொரு சிறுமி “தான் பள்ளிக்கு செல்லவில்லை” என கூறியுள்ளார். அந்த சிறுமியிடமும் அவர்களது பெற்றோர் விசாரித்ததில், அச்சிறுமியும் பாலியல் சீண்டலுக்கு உள்ளானது தெரியவந்தது.
பின்னர், சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகாரை பல மணிநேரங்களுக்கு பிறகு தான் காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அதே பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டு வந்த அக்ஷய் ஷிண்டே (வயது 23) எனும் நபர் தான் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்து அவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த விவகாரம் நேற்று (ஆகஸ்ட் 20) மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவந்து பள்ளியில் குவிந்தனர். “குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் ” என போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பள்ளி வளாகம் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. மேலும், பத்லாபூர் ரயில் நிலையம் முற்றுகை , சாலை மறியல் என பொதுமக்களின் போராட்டம் வெடித்தது. அம்மாநில அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம் தொடர்ந்தது.
பின்னர் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். சிறுமிகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் மீது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளனர் என தானே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற ஒரு சம்பவம் , இதே மகாராஷ்டிரா மாநிலத்தில் அகோலா மாவட்டத்தில் காஜிகேட்டில் உள்ள அரசு பள்ளியில் நிகழ்ந்துள்ளது. அங்கு பணியாற்றிய ஆசிரியர் பிரமோத் மனோகர் சர்தார் என்பவர் 6 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அகோலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை கைது செய்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையை துவங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பதிவு செயப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என மாவட்ட எஸ்.பி பச்சன் சிங் தெரிவித்துள்ளார்.