3 மாதங்களுக்கு பிறகு ஆந்திராவில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு…!
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் நாளை திறக்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டது. இந்நிலையில் பல மாநிலங்களில் வழிபட்டு தலங்கள், தியேட்டர்கள், மால்கள், கடைகள் அனைத்தும் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆந்திர மாநிலத்திலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் ஜூலை 8-ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
தற்போது மீண்டும் வருகிற 31-ஆம் தேதி அதாவது நாளை ஆந்திர மாநிலம் முழுவதிலும் சி சென்டர்களில் உள்ள தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும், திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆந்திர அரசு வலியுறுத்தியுள்ளது .