2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட இளைஞர்..!
மங்களூரு இளைஞருக்கு ஒரே நேரத்தில் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தவறுதலாக செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை அன்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ள தக்கலட்கா கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் நடந்த இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான மக்கள் பங்கு பெற்றுள்ளனர். இங்கு இருந்த கூட்ட நெரிசலில், கே.பி. அருண் என்ற 19 வயது இளைஞருக்கு முதல் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு செலுத்தியுள்ளனர்.
பின்னர் அதே அறையிலேயே காத்திருந்துள்ளார். இந்த நிலையில், அங்கிருந்த சுகாதார பணியாளர் மீண்டும் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். இதன் பின்னர் தான் மீண்டும் செலுத்தியவருக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்பதை உணர்ந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலில் ஏதும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதிக்க அங்கேயே சில மணி நேரங்கள் இருக்க வைத்துள்ளனர்.
அவரை வீட்டுக்கு அனுப்பிய பிறகும் கூட சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டுக்கே சென்று பரிசோதனை செய்துள்ளனர். மேலும், அவருக்கு இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இருந்தாலும், முதல் தவணை செலுத்திய பிறகும், அதே அறையில் அருண் காத்திருந்தது தான் இந்த தவறான நிகழ்வு ஏற்பட காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.