“கொடுத்த வார்த்தை தான் முக்கியம்”.. பயணியின் வீடு தேடி சென்ற ஆட்டோ ஓட்டுநர்.!
பெங்களூர் :தன்னுடைய ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் 30 ரூபாய் விட்டு சென்ற நிலையில் அதை வீடு தேடி சென்று ஆட்டோக்காரர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியாயம், நேர்மை, அறம் எல்லாம் இன்று செய்திகளில் எழுதித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அரிதான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர், தனக்கு நடந்த அனுபவத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. நியாயமுள்ள ரேட்டுக்காரன் என்ற பாடலின் வரி ஆட்டோக்காரர்களுக்குப் பொருந்தும் என்றே சொல்லலாம். அந்த பாடல் வரிகளுக்கு ஏற்றபடி பெங்களூரில் ஆட்டோக்காரர் ஒருவர் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.
அது என்னவென்றால், இந்திரா நகரில் இருந்து பிஎஸ்கே பகுதிக்கு நம்ம யாத்ரி செயலி மூலம் பயணி ஒருவர் ஆட்டோவை புக் செய்துள்ளார். அவர் புக் செய்த ஆட்டோவும் வந்த நிலையில், சவாரியின் போது, ஆட்டோக்காரர் பெட்ரோல் பங்கில் ஆட்டோவை நிறுத்தினார். பின் பயணியிடம், பயணத்திற்கான கட்டணம் ரூ.200 கூட சேர்த்து 30 ரூபாய் போட்டு எரிவாயு நிரப்புவதற்காக பயணியிடம் ரூ.230 வாங்கிக்கொண்டு இறங்கும்போது கொடுத்துவிடுவதாக ஆட்டோக்காரர் கூறியுள்ளார்.
ஆட்டோக்காரர் சொன்னதை மறந்துவிட்டுப் பயணி தன்னுடைய 30 ரூபாயை வாங்காமல் சென்றுள்ளார். பின் நாம் பயணியிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற நியாயத்தோடு 30 ரூபாயை கொடுக்கவேண்டும் என அடுத்த நாள் அந்த பயணியின் வீட்டிற்கே சென்று உங்களுடைய பணம் என அந்த பாக்கி பணத்தைக் கொடுத்துள்ளார். பணம் கொடுத்ததைப் பார்த்த அந்த பயணி “இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா? ” என ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார்.
ஆட்டோக்காரர் செய்த இந்த நெகிழ்ச்சியான செய்யலை உலகம் முழுவதும் தெரிவிக்கவேண்டும் என்பதற்காக அந்த பயணி தன்னுடைய Reddit இணையத்தளத்தில் ஆட்டோக்காரரை பாராட்டி பதிவு ஒன்றையும் போட்டியிருக்கிறார். நேற்று ஆட்டோகாரர் 30 ரூபாய் பணத்தை என்னிடம் தருவதாக கூறினார். நான் மறந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். இன்று காலை, 10 மணியளவில், யாரோ என் கதவைத் தட்டினார்கள். திறந்து பார்த்தபோது ஆட்டோ டிரைவர்.
அவர் 30 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, நேற்று என்னிடம் திருப்பிச் செலுத்த மறந்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டார். எனக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. இவ்வளவு நேர்மையான ஒருவரைப் பார்ப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது” எனவும் ஆட்டோக்காரரை பாராட்டினார் அந்த பயணி. பயணி மட்டுமின்றி இந்த தகவலைப் பார்த்த பலரும் என்ன மனுஷன் யா… எனவும் சல்யூட் சகோ உங்கள் கேரக்டருக்கு… எனவும் பாராட்டி வருகிறார்கள்.