கடன்களை திருப்பி செலுத்துவதில் மகளிர் சுய உதவி குழுவினர் முன்மாதிரியாக உள்ளது :நரேந்திரா சிங்
புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நாடு முழுவதுமுள்ள சிறந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கான தேசிய விருதுகளை மத்திய கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி நரேந்திரா சிங் தோமர் இன்று வழங்கினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, இதுபோன்ற சமூக அமைப்புகளின் சிறந்த செயல்களுக்காக வழங்கப்படும் வெளிப்படையான அங்கீகாரம் இந்த விருதுகள். ஏழை உறுப்பினர்களுக்கு பெருமை அளிக்கும் உணர்வை இது ஏற்படுத்தும் என கூறினார்.
கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவி குழுவினரை பாராட்டிய தோமர், அவர்கள் வளர்ச்சியின் உண்மையான முகவர்கள்.
இந்த குழுக்களை நடத்தி வரும் நமது சகோதரிகள் தங்களது வீடுகளை நிர்வாகம் செய்வதுடன் தங்களது கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறினார்.
நாட்டில் கடன்களை திருப்பி செலுத்துவதில் ஓர் எடுத்துக்காட்டாக கிராமப்புற மகளிர் சுய உதவி குழுவினர் இருக்கின்றனர். மொத்த தொகையில் 2 சதவீதத்தினரே கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.