விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – பிரதமர் மோடி .!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூட்டத்தொடர் தொடங்க முடியவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டதால், இரு கூட்டத் தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடியது. அப்போது, மறைந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.