20 மணி நேர உக்ரைன் பயணம்.. மோடியை அழைத்து செல்லும் ரயில் ‘Force one’.! அப்படி என்ன இருக்கு?
டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
ரஷ்யா – உக்ரைன் மோதலில் நடுநிலை வகிக்கும் விதமாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வருகை உலக நாடுகள் மத்தியில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, உக்ரைன் அதிபரிடம் ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது.
போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு வரும் வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்க்கு செல்லும் ரயிலில் பிரதமர் மோடி 20 மணி நேரம் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஏன் ரயிலில் செல்கிறார்? அந்த ரயிலின் சிறப்பு என்னவென்று பார்க்கலாம்.
ரயிலில் செல்லும் காரணம்
அங்கு போர் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு, சாலைகள் ஆபத்தான நிலையில் இருப்பதால், உக்ரைனுக்குள் மற்றும் வெளியே செல்லும் பாதுகாப்பான மற்றும் நம்பகமாக இருக்கும் ஒரே வழி இந்த ரயில் பாதை தான். இந்நிலையில், பிரதமர் மோடியின் அந்தஸ்துக்குத் தேவையான அனைத்து ஆடம்பரமும் பாதுகாப்பும் அந்த ரயிலில் உள்ளது.
ரயில் ஃபோர்ஸ் ஒன் சிறப்பு
இந்த சொகுசு ரயில் முதலில் 2014-ஆம் ஆண்டு கிரிமியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு எதுவாகவும், உலகத் தலைவர்கள் மற்றும் விஐபிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கும் ஏற்ப அவை மீண்டும் மெருகேற்றப்பட்டது.
இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த உயர் பாதுகாப்பு ரயில் (Train Force One), போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் வழியாக செல்வதற்கு ஒரு வசதியான பயணத்தை வழங்குகிறது.
தலைவர்கள் பயணம்
அப்படிபட்ட ஆடம்பரமான வசதிகள், ஓய்வெடுக்கும் வசதிகளுடன் கூடிய அறை என பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த ஃபோர்ஸ் ஒன் ரயிலில், அமெரிக்க ஜனாதிபதி பைடனைத் தவிர, 200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் இதுவரை போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருவதற்கு இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.
இவர்களில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் , கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் அடங்குவர். குறிப்பாக, உக்ரன் பிரதமர் ஜெலென்ஸ்கி வெளிநாடு செல்லும் போது இந்த ரயிலை தவறாமல் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.