கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கும் – டெல்லி முதல்வர்!
- டெல்லியில் கொரோனாவின் இரண்டாம் அலை மிக அதிகளவிலான உயிரிழப்புகளை பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
- கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக அதிகளவில் பரவியதுடன், அதிகப்படியான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையால் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் விரைவில் வரவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த மூன்றாம் அலையில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான ஆலோசனை கூட்டத்தை முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் காணொலி மூலமாக நடத்தியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், கொரோனா மூன்றாம் அலையில் நாளொன்றுக்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும், இதனை எதிர்கொள்ளும் விதமாக டெல்லியில் 64 ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், புதியவகை வைரஸ்களை கண்டறிய இரண்டு ஆராய்ச்சி கூடங்களும் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கும் எனவும், இதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் இதனை தவிர்ப்பதற்காக ஆலோசனை குழு அமைக்கவும், தேவையான மருத்துவக்கட்டமைப்பை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.