திருடிச் சென்ற 17000 கொரோனா தடுப்பூசிகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி வைத்து சென்ற திருடன்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 1700 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன் ஒருவன், மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் மருத்துவமனையிலேயே வைத்துச் சென்றுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு இடங்களிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில போலியான கொரோனா தடுப்பூசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,700 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளது.
எனவே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வந்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை திருடிய திருடன் தற்போது தனது தவறை உணர்ந்து திருடிய தடுப்பூசி மருந்துகளை மருத்துவமனையிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
அதுமட்டுமில்லாமல் அந்த தடுப்பூசிகள் உடன் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்துள்ளான்.அதில், பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகளை திருடியதற்காக தான் வருந்துவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது தடுப்பூசிகள் கிடைத்து விட்டாலும் திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் மீண்டும் வைக்கப்பட்டு விட்டதால் அந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்