அயோத்தியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட திட்டத்தின்படியே ராமர் கோவில்.!
- 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட அயோத்தி கோயில் கட்டுமானம் தொடர்பான திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள 15 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் விஸ்வ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 11 பேர் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது. இதனிடையே அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொது செயலாளர் சம்பத் ராய், 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட அயோத்தி கோயில் கட்டுமானம் தொடர்பான திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கோயில் முழுவதும் அதன்படியே கட்டப்படும் என்றும் கூறினார். மேலும் விஸ்வ ஹிந்து பரிசத் திட்டத்தில் மாற்றங்களை செய்வது குறித்து பேசி வருவோர், கோயில் கட்டப்படுவதை விரும்பாதவர்கள் என்றும், அவர்களின் செயலால் அயோத்தி கோயில் கட்டும் பணி தாமதமடையவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.