புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறப்பாரா.? இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!
புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்படுகிறது.
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றமானது 96 ஆண்டுகள் பழமையான காரணத்தால், புதிய நாடாளுமன்றத்தை ஆளும் பாஜக அரசு டெல்லி, சென்ட்ரல் விஸ்டாவில் 970 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்றமானது வரும் மே 28இல் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த புதிய நாடாளுமன்றத்தை மரபுப்படி குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
மேலும், புதிய நாடாளுமன்ற திறப்பு விவகாரத்தில் மத்திய அரசு விதிகளை மீறிவிட்டது. சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெய் சுகேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
இந்த ரிட் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று, இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை யார் திறக்க உள்ளார் எனும் விவகாரத்தில் இன்று முடிவு எட்டப்படும் என தெரிகிறது.