#Breaking : ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைந்ததில் தலையிட விரும்பவில்லை.! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைந்ததில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வழக்கை 7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்திய அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்ட சிவசேனா வழக்கில் (கிட்டத்தட்ட தமிழ்நாட்டு அதிமுக வழக்கு போல) இன்று உச்சநீதிமன்றத்தில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி அமைத்தது.
அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியது. இதனால், அப்போது உத்தவ் தாக்கரே அரசு சார்பில் மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் 16 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனியாக பிரிந்து 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.
16 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே சபாநயகரை தகுதிநீக்கம் செய்ய கோரிய மனு, நிலுவையில் இருக்கும் போது அவர் கூறிய தகுதிநீக்கம் செல்லாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று புதுப்புது உத்தரவுகளை உச்சநீதிமன்ற 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வு பிறப்பித்துள்ளது .
அதன்படி இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஏக்நாத் ஷிண்டே ஓர் அணியாக செயல்பட்டு ஆட்சியமைத்து வருகிறார்கள் அவர்கள் ஒரு கட்சி அல்ல. அதனால் அவர்கள் கொறடா அமைத்தது தவறு. அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் மீண்டும் முதல்வராக தொடர முடியாது.
இதனால் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி இந்த வழக்கை, 7பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது .