உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் டெல்லிக்கு மாற்றம் !பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்து உத்திர பிரதேசத்தில் இருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியாக இருந்தபோது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.ஏற்கனவே அந்த பெண்ணின் பாலியல் புகார் பெரும் சர்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை இறந்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.நாடு முழுவதும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ-வை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பிறகு பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார்.பின் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.
கடந்த 12 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது உயிருக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் ஜூலை 28 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ரேபரேலி பகுதியில் அவருடயை அம்மா, அவருடைய வழக்கறிஞர், பெண்ணின் உறவுக்கார பெண்கள் ஆகியோர் காரில் சென்றனர்.அப்போது அவர்கள் சென்ற கார் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் கடுமையாக காயமடைந்தனர்.எதிர்பாராத விதமாக இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா மற்றும் உறவினப் பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து திட்டமிட்டு நடைபெற்றது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தது.நடந்த விபத்திற்கு பாஜகதான் காரணம் என்று குற்றம்சாட்டியது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது .இது தொடர்பாக உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ துணை இயக்குநர் சம்பத் மீனா உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதில் சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் விபத்து வழக்கை முடிக்க 30 நாள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 30 நாள் அவகாசம் வழங்க முடியாது, 7 நாட்களில் முடியுங்கள் என்று தெரிவித்தார்.பின்னர் வழக்கின் விசாரணையை 2 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தார்.
பின் விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் உ.பி.யில் இருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது .வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்ட பின்னர் 45 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உத்திர பிரதேச அரசு ரூ.25 இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட பெண் ,பெண்ணின் தாயார்,வழக்கறிஞர் மற்றும் 4 சகோதரர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய தகவல்கள்:
பெண்ணின் உறவினர்கள் விபத்து தொடர்பான வழக்கை 7 நாட்களில் சிபிஐ விசாரித்து முடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வழக்குகள் அனைத்தும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்ட பின்னர் 45 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உத்திர பிரதேச அரசு ரூ.25 இழப்பீடு வழங்க வேண்டும்.