பில்கிஸ் பானு வழக்கு.! குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு எனும் கர்ப்பிணி பெண் ஓர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2008ஆம் ஆண்டு அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகளும் தண்டனை குறைப்பு விதிப்படி விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விடுதலையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், சுபாஷினி அலி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜால் புயான் ஆகியோர் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையில் குஜராத் அரசு தரப்பில், கடந்த 2008ஆம் ஆண்டு தண்டனை பெற்ற 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். 1992 சட்டத்திருத்தம் படி, தண்டனை குறைப்பு விதிகளின்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று விடுதலை செய்யப்பட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விசாரணையில் நீதிபகள் கூறுகையில், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர்கள் எந்த விதிகளின்படி விடுதலை செய்யப்பட்டனர்.? ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்ட பிறகு மீண்டும் எப்படி தண்டனை குறைக்கப்பட்டது .? 1992 தண்டனை குறைப்பு கொள்கை எந்தளவுக்கு மற்ற கைதிகளுக்கும் பயன்பட்டது என்றும், இது எவ்வளவு தூரம் செயல்பாட்டில் உள்ளது என்றும், இது சம்பந்தமான தெளிவான தகவல்களை தர வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து யூதாவிட்டனர்.