சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி இஸ்ரோவின் வெற்றி மட்டுமல்ல..! மத்திய அமைச்சரவை தீர்மானம்..!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில், சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதை பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து கூறிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “சந்திரயான்-3 திட்டத்திற்காக பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளின் வரலாற்று வெற்றியை அமைச்சரவை பாராட்டுகிறது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி இஸ்ரோவின் வெற்றி மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏற்றத்தின் சின்னம். ஆகஸ்ட் 23 ஆம் தேதியை ‘தேசிய அறிவியல் தினமாக’ கொண்டாடும் நடவடிக்கையை அமைச்சரவை வரவேற்கிறது. ” என்றார்.
மேலும், “சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்குவதில் நமது பெண் விஞ்ஞானிகள் பங்களிப்பை வழங்கியதற்காக அமைச்சரவை பெருமை கொள்கிறது. இது அடுத்த தலைமுறை பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிக்கும். இந்திய விண்வெளி திட்டத்தை நோக்கிய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கும் தலைமைத்துவத்துக்கும் அமைச்சரவை நன்றி தெரிவிக்கிறது” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்