மம்தா பதவி விலக வேண்டுமா? குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டுமா? திசை திரும்பும் போராட்டக்களம்.!
கொல்கத்தா : மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கீகரிக்கப்படாத மாணவர் அமைப்பைச் சேர்ந்தோர் பேரணி நடத்தியுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட மம்தா பதவி விலக வேண்டும் என்ற குரல்தான் வலுப்பெற்று வருகிறது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்களுக்குப் பின்னால் இருந்த நோக்கம் என்ன? என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு இடையில் இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும், மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இவர்களைப் போலவே முதலமைச்சர் மம்தா பேனர்ஜியும் சாலையில் இறங்கி பேரணி நடத்தினார். அது மட்டும் இன்றி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நபர்கள் போராட்டம் செய்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால், முதலமைச்சர் என்ற அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மம்தா ஏன் சாலையில் இறங்கிப் போராட வேண்டும்? வீரல் நீட்டி ஆணையிட்டால் காவலர்கள் உட்பட அனைத்து துறையினரும் களத்தில் இறங்கி குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியை மேற்கொள்வார்களே? இவர் யாருக்கு எதிராக? அல்லது யாரிடம் நியாயம் கேட்டுப் போராடுகிறார் என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? பெண் மருத்துவர் கொலை வழக்கிற்குப் பின்னால் ஒரு குற்றவாளி அல்ல.. பல குற்றவாளிகள் உள்ள நிலையில் இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, வேண்டும் என்றே அறங்கேற்றப்பட்ட கொடூரம்தான் என்பது அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகவும் உள்ளது. ஆனால், இதற்கு பின்னால் மம்தாவுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி கட்டவிழ்க்கபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றார்போல் இந்த விவகாரத்தை கையாண்ட விதத்தில் மம்தா பேனர்ஜிக்கு ஏற்பட்ட தடுமாற்றம், அவரே அந்த சூழ்ச்சி வலையில் சிக்க முதன்மை வாயிலாக அமைந்துவிட்டது என்ற கருத்துக்களும் வராமல் இல்லை.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான போரில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க அல்லது தங்கள் ஆளுமையை அதிகாரப்படுத்த பொதுமக்களை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் எலிகள்போல் பார்க்கும் அவலநிலை நீடிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில்தான் மம்தா பதவி விலக வேண்டும் என்ற முழக்கம் அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் வலு பெற்று வருகிறது. இந்த செய்தி பல மீடியாக்களில் தலைப்பு செய்திகளாகவும் இடம் பெற்று வருகிறது. ஆனால் குற்றவாளிகள் மட்டும் இன்றுவரை கண்டறியப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த நிலையில்தான் அங்கீகரிக்கப்படாத மாணவர் அமைப்பை சேர்ந்த சிலர் இன்று மம்தா பதவி விலக வேண்டும் என்பதை முன்நிறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தியுள்ளனர். இந்த மாணவர் அமைப்பின் பேரணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவில்லை. அது மட்டும் இன்றி, இன்று போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புக்குப் பின்னால் அரசியல் தலைவர்கள் சிலரின் பின்புலம் இருப்பதாக உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. அதாவது, இந்த பேரணி வாயிலாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர் அமைப்புகளில் ஒரு பிரிவை சேர்ந்த தலைவர் கொல்கத்தாவில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வைத்து அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்ததாகவும் உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தாக கூறப்படுகிறது.
இதே சந்தேகங்களை மாநில உளவுத்துறை அமைப்பு, மாநில காவல்துறைக்கு கூறி எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், மாணவர்கள் பேரணிக்கு கொல்கத்தா காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என கூறப்படுகிறது. தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்ற தகவலின் பெயரில் தலைமைச் செயலகத்தைச் சுற்றி 19 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். தண்ணீர் பீய்ச்சும் பீரங்கிகள், துணை ராணுவத்தினர் உதவியும் நாடப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து மாணவர் அமைப்பை சேர்ந்த பிரமுகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” இது மேற்கு வங்க மாணவர்களின் அரசியல் சாராத எதிர்ப்பு ஊர்வலம். எங்களுக்குள் எந்த அரசியல் சயத்தையும் பூசாதீர்கள். இது ஒரு சமூகநல இயக்கம். அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் அணிவகுப்பில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நடைப்பயணத்தால் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதாயம் பெறுவதை நாங்கள் விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளனர்.