நீ ஜெயிச்சுட்ட தம்பி! சமோசா விற்று சாதனை படைத்த “சன்னி குமாரின்” கதை!
சாதாரண சமோசா வியாபாரியாக இருந்து இந்தியாவின் கடினமான தேர்வுகளுள் ஒன்றான நீட் தேர்வை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுருக்கிறார் சன்னி குமார்.
உ.பி : இந்தியாவில் பலரும் பல விஷயங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் நாடு முழுவதும் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது நீட் தேர்வு தான். ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில்வதற்கு முக்கியமாக அமைவது இந்த நீட் தேர்வு தான்.
இப்படி தேர்வு முறை சரியில்லை, கேள்விகள் கடிமானது என பல எதிர்ப்புகள் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் இந்த தேர்வு எழுதும் மாணவர்களில் ஒரு சிலர் குறிப்பாக ஏழை எளிய மாணவர்கள் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் பயிலும் தங்களது கனவை அடைந்துள்ளனர்.
இது நமது தமிழ்நாட்டிலும் நிறைய நடந்திருக்கிறது, மேலும் தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் வருகின்றனர். அதே போல ஒரு சம்பவம் தான் தற்போது உ.பியில் உள்ள நொய்டாவில் நடந்திருக்கிறது. நொய்டாவைச் சேர்ந்த சமோசா விற்கும் மாணவன் தான் சன்னி குமார்.
இவர் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பணக் கஷ்டங்கள் மற்றும் நெருக்கடியான வேலைகள் இருந்த போதிலும் கூட மருத்துவம் மீதுள்ள காதலால் விடாமுயற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. 720 மதிப்பெண்களுக்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனையை படைத்துள்ளார் சன்னி குமார்.
இவரது இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சாதாரண ஒரு சமோசா வியாபாரியாக இருந்து கடினமான தேர்வுகளில் ஒன்றான நீட் தேர்வில் வெற்றி பெற்று பல மாணவர்களுக்கு இவர் முன் உதாரணமாக இருந்து வருகிறார். தேர்வில் வெற்றி பெற்ற சன்னியின் பயணம் சாதாரணமான ஒன்று அல்ல. அவர் தனது சமோசா கடையும் பார்த்து கொண்டு படித்தும் வருகிறார்.
சன்னி, தினமும் மாலையில் 4 முதல் 5 மணி நேரம் சமோசா கடையில் சமோசா விற்பனை செய்கிறார். சிறிய மருந்துகளால் பெரிய நோய்களை எவ்வாறு குணப்படுத்த முடியும் என்ற ஆர்வத்தால் அவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பயோலாஜி (உயிரியல்) குரூப்பை தேர்ந்தெடுத்து நீட் தேர்வுக்காக தன்னை தானே தயார் செய்துள்ளார்.
தனது 11-ம் வகுப்பு முதல் ஆன்லைன் பயிற்சித் தளமான “Physics Wallah”-வில் படித்து கொண்டு வருகிறார். காலை பள்ளி அது முடிந்த பிறகு மாலை சமோசா விற்பனை, அதன் பிறகு இரவு நேரத்தில் படிப்பு என கடினமான சூழ்நிலையில் படித்து தேர்ச்சி பெற்றுருக்கிறார்.
சமீபத்தில், Physics Wallah நிறுவனரான அலக் பாண்டே, சன்னியின் இந்த சாதனைக் கதையை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், அலக் பாண்டே சன்னியின் வாடகை வீட்டிற்கு செல்கிறார். அங்கு உள்ள சுவர்களில் பல காகிதங்கள் ஒட்டப்பட்டுள்ளன அந்த காகிதங்களில் மருத்துவக்குறிப்பிகள் எழுதப்பட்டுள்ளது.
மேலும், அந்த வீடியோவில் சன்னி செய்த அந்த சமோசாவை அலக் பாண்டே சாப்பிடுவது போல காட்சியும் அடங்கியுள்ளது. மேலும், சன்னியின் இந்த மருத்துவம் பற்றிய ஆர்வத்தை உணர்ந்த அலக் பாண்டே, சன்னிக்கு ரூ.6 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறார்.
மேலும், அவரது மருத்துவக் கல்லூரிக்கு தேவைப்படும் கல்வி கட்டணத்தயும் அவரே ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். ஏழை குடும்பத்தில் பிறந்து மருத்துவர் ஆக வேண்டும் என கனவு காணும் ஒவ்வொருவருக்கும் சன்னியின் வாழ்க்கை ஒரு சான்று என்றே கூறலாம். சன்னி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் பிறந்ததால் அவர் தந்து வாழ்க்கையில் அடிக்கடி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அவரது தாயாரும் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.
மேலும், கிடைக்கின்ற மற்ற நேரங்களில் வேறு ஏதேனும் வீடுகளில் சமைத்தும் வருகிறார். சன்னியின் தாயாரின் மூத்த சகோதரரும் அவ்வப்போது குடும்பத்தை பொருளாதார ரீதியாக ஆதரித்தும் வருகிறார். இது போல பல கஷ்டங்கள் இருந்த போதிலும் கூட சன்னி எப்போதுமே தனது கல்விக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறார்.
அவர் நடத்தி வந்த டீக்கடை கூட பல்வேறு காரணங்களால் அதிகாரிகளால் அகற்றபட்ட போதிலும் கூட இதற்கு வேறு மார்க்கம் கண்டு பிடித்து தற்போது சமோசா கடையை நடத்தி தனது குடும்பத்தை வழி நடத்தி வருகிறார். அவர் அடிக்கடி இரவு முழுவதும் படிப்பதனால் அது எனது கண்களைக் கஷ்டப்படுத்துகிறது என சன்னி பேசுகையில் கூறினார். இதை பற்றி சன்னி பேசுகையில், “பல நேரங்களில் நான் இரவு முழுவதும் படிப்பேன். இதனால், காலையில் எனக்கு கண்கள் வலிக்கும்.
ஆனால், டாக்டராக வேண்டும் என்பதே எனது இலக்கு. சமோசா விற்பது என் எதிர்காலத்தை ஒரு போதும் தீர்மானிக்காது.” என சன்னி கூறி இருந்தார். சன்னியின் இந்த கதை, நம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட திறனைப் பற்றி இந்த நேரத்தில் நினைவு கூற வைக்கிறது. அவரது இந்த வெற்றி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு நின்று விடாது அவர் பல தடைகளை உடைத்து வாழ்க்கையில் வெகு தூரம் செல்வார் என்பதை நமக்கு இவரது இந்த கதை உணர்த்திகிறது.
இதனால், என்னதான் கடினமான தேர்வுகள் இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இருந்தால் அதற்காக நாம் உழைப்பை கொடுத்தால் ஒரு நாள் அது நம் கைவசமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இந்த சமோசா விற்கும் மாணவனான “சன்னி குமார்” தான் சான்று.