வயநாடு நிலவரம்: முதல்வரின் பயணம் முதல்., பலி எண்ணிக்கை வரை.!
கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கியிருப்போரை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு 3வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது.
இன்னும் 240 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் :
முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற உள்ளது. சூரல்மலையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைய உள்ளன.
மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் மீட்பு பணிகள் மேலும் ஒருவார காலம் நீடிக்கும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர்.
முதலவர் பயணம் :
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கேரள முதல்வர் பினராயி விஜயன் கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவர், சூரல்மாலா மற்றும் முண்டக்கையில் மீட்புப் பணியை ஆய்வு செய்ய உள்ளார்.
3 நாட்களுக்கு இலவச டேட்டா :
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB மொபைல் டேட்டா, Unlimited Calls, 100 SMS இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.