தமிழின் பெருமை.! செங்கோலின் அருமை அவருக்கு தெரியாது., எல்.முருகன் பேச்சு.!
டெல்லி: புதிய நாடாளுமன்றம் துவக்க நாளின் போது பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் குறித்து சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.சவுத்ரி கூறுகையில், மக்களவையில் செங்கோல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது என்ன மன்னராட்சியா.? ஜனநாயக ஆட்சியில் செங்கோலை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அரசியல் சாசன புத்தகத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார்.
செங்கோல் குறித்து பல்வேறு உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.சவுத்ரிக்கு தமிழ் கலாச்சாரம் பற்றி தெரியாது. அவருக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது. அவருக்கு தமிழ் செங்கோலின் மதிப்பு தெரியாது.
செங்கோல் அனைவருக்கும் சமநீதியை பிரதிபலிக்கிறது. செங்கோல் நியாயமான அரசாங்கத்தை பிரதிபலிக்கிறது. நமது பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் செங்கோலை மக்களுக்கு அடையாளம் காட்டி புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினார். புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. I.N.D.I.A கூட்டணி மக்களின் செங்கோலை மதிப்பதில்லை. செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார்.