மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.! ஆளுநரை மாற்ற பாஜக கூட்டணியில் ஆளும் சிவசேனா கோரிக்கை.!
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜி பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை வேறுமாநிலத்துக்கு மாற்ற சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை போலவே , மஹாராஷ்டிராவிழும் தற்போது ஆளுநர் கருத்துக்கள் சர்ச்சையாகி அவரை மாற்ற கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், இதில் எதிர்ப்பு தெரிவித்து வருவது பாஜக கூட்டணியோடு ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சி எம்.எல் .ஏக்கள் தான்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில், அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாங்கள் சிறுவயதில் இருக்கையில் தலைவர்கள் பெயர் கேட்டால், சுபாஷ் சந்திர போஸ், மஹாத்மா காந்தி, நேரு ஆகிய தலைவர்களை குறிப்பிடுவோம்.
ஆனால், மஹாராஷ்டிராவில் உள்ளவர்களுக்கு அது போல வெளியில் தேட தேவையில்லை. அவர்கள் உடனடியாக சத்ரபதி சிவாஜி பெயரை கூறிவிடுகிறார்கள். சிவாஜி கடந்த கால ஹீரோ. சமகாலத்தில் அம்பேத்கார் முதல் நிதின் கட்காரி வரையில் பலர் இருக்கின்றனர் என ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அந்த விழாவில் குறிப்பிட்டார்.
ஆளுநர் கோஷ்யாரி கருத்துக்கு, ஆளும் சிவசேனா கட்சியில் பலத்த எதிர்ப்பு உருவாகி, அவரை வேறு மாநிலத்திற்கு மாற்ற சொல்லும் கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. சிவசேனாவுடன் கூட்டணி வைத்து துணை முதல்வராக பதவியில் இருக்கும் பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவில் கூறுகையில் எங்களுக்கு எப்போதும் சிவாஜியை தவிர வேறு யாரும் முன்மாதிரியாக இருக்க முடியாது என ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்பாக தான் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.