கேரளம்-ஆக மாறிய கேரளா.! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.!
கேரளா: மத்திய அரசு பதிவேடு உள்ளிட்ட அனைத்து அரசு பதிவேடுகளிலும் கேரள மாநிலத்தின் பெயர் கேரளா (Kerala) என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாற்றி மலையாள சொல் வரும்படியாக கேரளம் (Keralam) என மாற்ற அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இதே கேரளா மாநில சட்டமன்றத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார். பின்னர் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். ஆனால், பல்வேறு நிர்வாக திருத்தங்கள் கொண்டுவர உள்ளதால் நடைமுறை சிக்கல் இருக்கிறது என கூறி கேரளா மாநிலத்தின் தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்று (ஜூன் 24) மீண்டும் ‘கேரளம் (Keralam)’ பெயர் மாற்றம் தீர்மானம் கேரளா சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து அந்த தீர்மானத்தில் குறிப்பிடுகையில், இந்திய அரசியலமைப்பு அட்டவணை 1இல் இந்த திருத்தத்தை கொண்டு வரவேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3ஐ பயன்படுத்தி இந்த திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.